Skip to main content

பேரிடர் நேரத்திலும் இடையறாத கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன்! - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்! 

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

mks

 

பேரிடர் நேரத்திலும் இடையறாத 'கரப்ஷன் - கமிஷன் - கலெக்‌ஷன்!' ‘தெர்மல் ஸ்கேனர்’ கொள்முதலில் நடந்ததை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்!" என முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடங்கி, உச்சநீதிமன்றம், மருத்துவர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் புறக்கணித்து, மூன்று நாளில் கரோனா ஒழிந்துவிடும் என ஆரூடம் சொல்லி, இப்போது கடவுளுக்குத்தான் தெரியும் எனச் சொல்லிக் கைவிரிக்கும்  தமிழக ஆட்சியாளர்கள், மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாமல், பேரிடர் நேரத்திலும் ஊழல் செய்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

 

சீனாவிலிருந்து ரேபிட் கிட் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் நீதிமன்றம் வரை சென்று அம்பலப்பட்ட நிலையில், அவற்றைத் திருப்பி அளிப்பதாகச் சொல்லிச் சமாளித்த ஆட்சியாளர்கள், இப்போது 'தெர்மல் ஸ்கேனர்' வாங்குவதில் ஊழல் செய்திருப்பது ஊடகங்கள் வாயிலாக ஊருக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.

 

குதிரை களவு போன பிறகு லாயத்தைப் பூட்டி வைப்பதைப் போல, சென்னையில் கரோனா தொற்று அதிகமாகி, உயிர்ப்பலிகளும் கூடிக்கொண்டிருக்கிற அச்சம் மிகுந்த சூழலில், ஊரடங்குக்குள் ஊரடங்கு என நிலைமை கடுமையாக்கப்பட்டுள்ள நேரத்தில், ஒவ்வொரு வீடாகச் சென்னை மாநகராட்சிக் களப்பணியாளர்கள் நேரில் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்காக, இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் சீனாவிலிருந்து 'பி.கே.58.பி.' என்ற வகையைச் சேர்ந்த 12 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவியைச் சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்திருப்பதை ‘தினகரன்’ நாளேடு முதல் பக்கத்தில் வெளியிட்டு, அதிலுள்ள ஊழல்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

 

இந்தத் தெர்மல் ஸ்கேனர் கருவியின் அதிகபட்ச (எம்.ஆர்.பி.) விலை ரூபாய் 9 ஆயிரத்து 175 ஆகும். மொத்தமாகக் கொள்முதல் செய்த காரணத்தால் விலைக் குறைப்பு செய்து, ஒரு கருவியின் விலை 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவில் வாங்கியிருக்க முடியும் என மருத்துவப் பணி சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலையைவிடக் குறைவான விலையில், 2 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 5 ரூபாய் வரையில் தரமான தெர்மல் ஸ்கேனர்கள் தமிழகத்திலேயே கிடைக்கின்றன. ஆன்லைன் மூலமாக 1,500 ரூபாயிலிருந்து 4 ஆயிரம் ரூபாய்வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை பல மருத்துவமனைகளும் மருத்துவர்களும் வாங்கியுள்ளனர். மொத்தமாக வாங்கும்போது இதைவிடக் குறைவான விலையில் வாங்க முடியும் என்றும், சீனத் தயாரிப்பு தெர்மல் ஸ்கேனரை இடைத்தரகர்கள் மூலமாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமென்ன என்றும் மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என ‘தினகரன்’ நாளேடு வெளியிட்டுள்ளது.

 

அதிக விலை கொடுத்து வாங்கிய தெர்மல் ஸ்கேனர் கருவிகளின் தரமோ படுமோசமாக இருக்கிறது என்றும், வீடு வீடாகச் சென்று உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்கும் மாநகராட்சி களப்பணியாளர்கள் யார் யாரைச் சோதனை செய்கிறார்களோ அவர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையையும் இந்தத் தெர்மல் ஸ்கேனர், ஒரே மாதிரியாக 100 டிகிரிக்கு மேல் காட்டுகிறது என்கிற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. மனித உடல் வெப்பநிலையின் சராசரி அளவைக் கடந்து, கடும் காய்ச்சல் உள்ளது போலக் காட்டும் தெர்மல் ஸ்கேனரால், நோய்த் தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகிறார்கள்.

 

எத்தனை பேரிடம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது என்பதைக் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டிய பொறுப்பு களப்பணியாளர்களுக்கு இருப்பதால், இதனை எப்படிப் பதிவேற்றுவது எனப் புரியாமல் தவிக்கிறார்கள். உயரதிகாரிகளோ, நீங்கள் பரிசோதிக்காவிட்டாலும் பரவாயில்லை; ஆய்வு நேரங்களில் கருவிகள் இல்லாமல் இருக்கக்கூடாது. அதனால் பெயரளவுக்கு, தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

  

முன்யோசனையோ - தெளிவான திட்டமிடலோ - தொலைநோக்குப் பார்வையோ, எல்லாவற்றுக்கும் மேலாக வெளிப்படைத்தன்மையோ இல்லாமல், முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான அ.தி.முக. அரசு செயல்படுவதைப் பல முறை ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டியபிறகும், அவற்றைத்  திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி, எதிர்க்கட்சியினர் ‘அரசியல்’ செய்வதாகச் சொல்லி, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் வேலைகளே தொடர்ந்து  நடைபெறுகின்றன.

 

வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்படுகிறோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களிடம் சொல்கிறார். ஆனால்,  அவரது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மாஸ்க் ஒன்றின் விலை 15 ரூபாய் என ‘பில்’ போடப்பட்டுள்ளது. ஆயிரம், இரண்டாயிரம் என மொத்தமாக மாஸ்க் வாங்கும்போது, அடக்க விலை 3 ரூபாய் அளவில்தான் வரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். 500 ரூபாய் விலையுள்ள ஒரு லிட்டர் கிருமிநாசினியை 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக ‘நக்கீரன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தக் கிருமி நாசினியைத் தெளிப்பதற்கான 8 ஆயிரம் விலையுள்ள பவர் ஸ்பிரேயரை, 22 ஆயிரத்து 500 ரூபாய் என பில்லில் குறிப்பிட்டுள்ளனர் என்பதையும் அந்த ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.

 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியமான அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கும் தலா 1 என வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர்களுக்காக செலவிடப்பட்டிருப்பது 2 லட்சத்து 68 ஆயிரத்து 922 ரூபாய். அதாவது, ஒரு தெர்மல் ஸ்கேனர் விலை ரூ.7,909 என்றாகிறது. சென்னை மாநகராட்சி வாங்கியுள்ள தெர்மல் ஸ்கேனர்களைவிட, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் சொந்த ஒன்றியத்தில் வாங்கிய ஸ்கேனர்கள் விலை அதிகம் என்பதையே இது காட்டுகிறது.

 

http://onelink.to/nknapp

 

இதுபற்றி விரிவாக எழுதியுள்ள ‘நக்கீரன்’ இதழ், கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சில ஊராட்சி மன்றத் தலைவர்கள், இந்த அநியாயக் கொள்முதலைக் கண்டித்து, சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே காசோலை கொடுப்போம் என்று தெரிவித்திருப்பதையும் எடுத்துக்  காட்டியுள்ளது. அநியாய கூடுதல் விலையில் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதுடன், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்றும் 'நக்கீரன்' செய்தி வெளியிட்டுள்ளது.

 

பிளீச்சிங் பவுடர் முதல் பரிசோதனைக் கருவிகள் வரை, இந்தக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் ஊழல் செய்து, கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, மக்களின் உயிரோடு மரண விளையாட்டு ஆடிக்கொண்டிருப்பதை இனியாவது நிறுத்தி, இதுவரை நடந்தவை குறித்து, வெளிப்படைத்தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
cm stalin who started the excavation work

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டைகளில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தலம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர். 

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் கி.பி. 2 அல்லது 3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்லில், கோட்டைத் தலைவன் கணங்குமரன் ஆநிரைபூசலில் இறந்த தகவலை சொல்லும் நடுகல் என்பது தெரிய வந்தது. இதன் பிறகு பல்வேறு ஆய்வாளர்களின் வருகையை தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நீதிமன்றம் மூலம் அகழாய்வுக்கான உத்தரவும் பெறப்பட்டது.

cm stalin who started the excavation work

தொடர்ந்து 2021 ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக 2022-2023 ம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குனராக கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர். அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், செங்கல், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடுசெங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

cm stalin who started the excavation work

இந்த நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று செவ்வாய் கிழமை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சி பிரதிநிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொண்டனர். இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படும் என்ற கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட குழிகள் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கிடைத்துள்ள பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

cm stalin who started the excavation work

தற்போது நீர்வாவி குளத்தின் தென்மேற்கு கரைப் பகுதியில் உள்ள மேடான பகுதிகளில் அகழாய்வு செய்ய பணிகள் தொடங்கியுள்ளது. இதே போல மேலும் சில இடங்களையும் ஆய்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அகழாய்வு நடக்கும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.

Next Story

‘ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு...’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Tamil Nadu government notification on Attention of passengers traveling in omni buses

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி  பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இதனையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில், தமிழக அரசு நேற்று (17-06-24) வரை அதற்கான அனுமதி வழங்கியது.

இதனையடுத்தி, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை) என தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி இன்று (18-06-24) காலை வரை தமிழகத்தில் வெளிமாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்றுடன் அதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர். பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முறைகேடாகவும், விதிகளை மீறியும் இயக்கப்படும் ஆம்னிப் பேருந்திகளின் இயக்கத்தை இனி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். 

அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்திகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம். இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது’ என்று தெரிவித்துள்ளது.