Skip to main content

தூத்துக்குடியில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு ஆலோசனை!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
DMK election manifesto committee consultation in Thoothukudi

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை கொடுத்திருந்தது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், சி.வி.எம்.பி. எழிலரசன், எம்.எம். அப்துல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து இந்தக் குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசானைக் கூட்டம் தொடங்கியுள்ளது. அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் மீனவர்கள், தொழிற்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்களது கோரிக்கை மனுக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

முன்னதாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் பொதுமக்கள் தங்களின் பரிந்துரைகளைப் பகிர dmkmanifesto2024@dmk.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 08069556900 என்ற அலைபேசி எண்ணையும், எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு - https://twitter.com/DMKManifesto24, இன்ஸ்டாகிரம் - https://www.instagram.com/dmkmanifesto2024/, முகநூலிற்கு - https://www.facebook.com/DMKManifesto2024 என்ற சமூக இணைய தளப் பக்கத்தின் முகவரியையும் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா..” - முதல்வர் ஸ்டாலின்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Chief Minister Stalin criticized the BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா.. என்று முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், “கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு.. இது அப்பட்டமான பொய்க்கணக்கு; இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன் கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு,  பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!

2) ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா? இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.  இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு,  விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது! தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது ஒன்றிய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படும்” - பாஜக தேர்தல் அறிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
  bjp election manifesto that the Civil Code act will be implemented.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் மோடி அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து பேசி வருகிறார். அதில், “அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்ததற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். நாடு முழுவதும் பாரதிய ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும். பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும். 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்படும். அனைவருக்கும் பாரத திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் மூன்று கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

முத்ரா கடன் உதவி  ரூபாய் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும். குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இலவச உணவு தானியம் வழங்கப்படும் திட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும்.  திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கு (One Nation One Student) நிரந்தர அடையாள எண். மிக தொன்மையான தமிழ் மொழி நம் நாட்டின் மிகப்பெரிய கௌரவம். தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் பரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும். 

பயோ கேஸ், சூரிய ஒளி, மின்சக்தி உள்ளிட்ட சுயசார்பு இந்தியாவுக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவை மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோ, ஸ்லீப்பர் உள்ள மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்.

லாரி ஓட்டுனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம். நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பெண்களுக்கு ரூபாய் 1-க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.