தமிழகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகள், தங்கள் கட்சி சார்ந்து இருக்கக்கூடிய உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் கட்டாயம் செலவு செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்தினம் வரை கட்சியினரின் பிரச்சாரச் செலவு, வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் என ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்நிலையில், குளித்தலையில் போட்டியிடும் திமுகவை சேர்ந்த வேட்பாளர் மாணிக்கம் தேர்தல் செலவிற்குப் பணம் இல்லாததால் தனக்குச் சொந்தமான நிலங்களை திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் விற்பனை செய்து தேர்தல் செலவிற்காக சுமார் 5 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
அமைச்சர் வளர்மதியின் கணவர் சீதாராமனுக்கு சொந்த ஊர் குளித்தலை என்பதால் அவர் மூலம் திமுக வேட்பாளர் மாணிக்கம் விற்பனை செய்துள்ளார். கட்சி ரீதியாக எதிரும் புதிருமாக இருந்தாலும் தங்கள் தேவைகளுக்காக கட்சிப் பாகுபாடு இல்லாமல் கொடுக்கல்-வாங்கலில் மிக நெருக்கமாக இருந்து வருகின்றனர்.