Skip to main content

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

Published on 17/01/2025 | Edited on 17/01/2025
DMK candidate files nomination Erode East constituency by-election

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10.01.2025 அன்று தொடங்கியது. இன்று (17/01/2025) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் இன்று மதியம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் மனீஷியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் திராவிட முன்னேற்றக் கழக ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார்,  திமுக மாநிலங்களவை எம்.பி. அந்தியூர் செல்வராஜ்,  திமுக மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் திண்டல் மணிராசு,  மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது மனுவை தாக்கல் செய்தார். அரசியல் கட்சிகள் என்ற அளவில் திமுக வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என இருவருக்கும் நேரடி போட்டி உருவாகியுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்