Skip to main content

‘மோடி சுட்ட வடை’ - திமுக வினோத பிரச்சாரம்!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
DMK is campaigning in a strange way against BJP

இந்தியா முழுவதும் மிகுந்த பரபரப்போடு காத்திருந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜகவை எப்படியாவது வெளியேற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் கருத்து கணிப்பு நடத்துதல் அதன் முடிவுகளை வெளியிடுதல் எனத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 

இதற்கிடையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிப் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. இதற்கிடையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இந்தியா டுடே ஒரு சர்வே நடத்தியது. இந்தக் கருத்து கணிப்பின் முடிவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஒரு சீட் கூட வங்க முடியாது எனக் கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் கோடங்கி வேடமணிந்து நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது என உடுக்கையடித்து, திமுக 40க்கு 40 தொகுதிகளும் வெற்றி பெறும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த விசித்திரமான பிரச்சாரம் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. 

DMK is campaigning in a strange way against BJP

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் வேளையில், சென்னையில் மேலும் ஒரு விசித்திரமான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தைப் பார்க்கும் போதே பொதுமக்கள் சிரித்த முகத்தோடு வரவேற்பு தருகின்றனர். திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் ஒரு விசித்திரமான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டவர்கள் இந்திய பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்துகொண்டு, தங்கள் கைகளின் ஆள்காட்டி விரலில் வடையை மாட்டிக்கொண்டு சென்றபடி ஆர்.கே. நகர் பகுதியில் உள்ள கடைகளில் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், வாக்காளர்களுக்கு தாங்கள் எடுத்துச் சென்ற வடைகளைக் கொடுத்துவிட்டு, இத்தனை காலம் வடை வடையாய் சுட்டுக்கொண்டு இருக்கும் மோடிக்கு இனியும் வாக்கு அளித்து விடாதீர்கள் என்றும், ஏற்கனவே அவர் சுட்ட வடைகளை உண்ணவே ஆட்கள் இல்லை என்றும் மோடியை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் இந்த விசித்திர பிரச்சாரத்தை செய்துள்ளனர். இந்த விசித்திர பிரச்சாரத்தை பார்த்த பொதுமக்கள் பலரும் சிரித்தபடி வரவேற்பு கொடுத்துள்ளனர். 

இது குறித்து இந்தப் பிரச்சாரத்தை நடத்திய திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் பழ. செல்வகுமாரிடம் கேட்டபோது, இந்திய பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வேலை வாய்ப்பில்லாத அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் தற்போதுதான் இந்திய மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிப்பதாகவும், சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை என அனைத்தும் பொதுமக்களை தினம் தினம் வாட்டி வதைத்து வருவதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல், தான் ஆட்சிக்கு வந்த உடனே அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணம் வந்து சேரும் எனக் கூறிவிட்டு இது நாள் வரை 5 பைசா கூட யாருக்கும் கொடுக்கவில்லை எனவும் கூறிய அவர், இதுபோன்று இந்த ஆண்டும் மோடி சுடும் வடைகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்