Skip to main content

“திமுகவின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது” - இ.பி.எஸ். குற்றச்சாட்டு!

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
DMK action is strongly condemnable ePS Allegation

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள வேப்பனஹள்ளி கிராமத்தில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மற்றும் பிற நலத்திட்டங்கள் தொடங்குவதற்கான பூமி பூஜை இன்று (11.09.2024) காலை நடைபெற இருந்தது. இதனையொட்டி இந்த விழாவில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.பி. முனுசாமி பங்கேற்கச் சென்றுள்ளார் அப்போது அங்கிருந்து திமுக நிர்வாகிகள், கே.பி. முனுசாமி இந்த விழாவில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு கட்சியினரிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கே.பி. முனுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து முனுசாமி மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நிலை முனுசாமி பூமி பூஜையில் கலந்து கொண்டார். மத்திய அரசுத் திட்டத்தின் தொடக்க விழாவில் அத்தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

DMK action is strongly condemnable ePS Allegation

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் (PMGSY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு. ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

சார்ந்த செய்திகள்