Skip to main content

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு கரோனா!

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

dmdk party lk sudheesh covid test positive

 

மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, கேரளா, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், கரோனா தடுப்பூசி முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், தே.மு.தி.க. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எல்.கே.சுதீஷ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் சூடுபிடித்துள்ள சூழலில், எல்.கே.சுதீஷ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.