Skip to main content

"நீதான வக்கீலுக்குப் படிக்கிற...?" இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ட்வீட்!  

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

pa.ranjith


 


சமீபத்தில் சேலத்தில் விஷ்ணுப்பிரியன் என்ற இளைஞரும், நாமக்கல்லில் தலித் சசிகுமார் என்ற இளைஞரும் சில நபர்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். 


இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் பண்பாட்டு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் சேலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளனர். அதில், "சேலம்‌ தலித் இளைஞர் விஷ்ணுப்பிரியன் படுகொலை. உடன் பிறந்த தம்பியும் கவலைக்கிடம். சாதியத் தீண்டாமை வெறியாட்டத்தை  நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கின்றது. சாதி வெறியர்கள் 10 பேரை மட்டுமே கைது செய்துள்ளது காவல்துறை. அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித் மக்களுக்குத் தொடர்ச்சியாக நிகழும் அநீதிகளைத் தமிழக அரசு ஏன் கண்டுகொள்ளவில்லை? தமிழக அரசு இந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா? ஒருவேளை தமிழகத்தில் தமிழக அரசு உள்ளது என்பது கற்பனைதானா?" என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

அதேபோல், "நாமக்கல்‌ வகுரம்பட்டியில் தலித்‌‌ சசிகுமாரை நீதானா வக்கீல் படிக்கிற என்றும் பெரியார் அம்பேத்கர் கருத்துகளைப் போற்றி பதிவு போடுறது நீதான" எனத் தாக்கியுள்ளனர். இந்தச் சாதியத் தீண்டாமையை நீலம் பண்பாட்டு மையம் கண்டிக்கின்றது. 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் என்றும், நாங்கள் தலைவர்களைப் பேசுகிறோம், தலைவர்களைப் பற்றி பதிவு செய்கிறோம் ஆனால் எங்களுக்குப் பாதுகாப்பும், சுயமரியாதையும் கிடைப்பது இல்லையே ஏன்? இந்தத் தமிழ்ச் சமூகம் இதற்குப் பதில் சொல்லுமா? நான் வழக்கறிஞர் ஆகியும் சமத்துவம் என்பது கற்பனை தானா என்று கேள்வி என்னுள் தோன்றுகிறது." என்றும் பதிவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள்; விடுதிக்குள் புகுந்து தாக்கிய கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
The gang that broke into the hostel for islamic students engaged in prayer

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாதம் ரம்ஜான் மாதம் என்பதால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்களும் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் பல்கலைக்கழகத்தை சுற்றி எந்த மசூதியும் இல்லாத காரணத்தினால், விடுதியில் தங்கி இருக்கும் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள், விடுதியில் ஓர் இடத்தில் கூடி தொழுகை செய்து வருகின்றனர். 

அந்த வகையில், கடந்த 16ஆம் தேதி இரவு இஸ்லாம் வகுப்பைச் சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் விடுதியில் தொழுகை நடத்தினர். அப்போது, அங்கு வந்த சுமார் 25 பேர் அடங்கிய கும்பல், தொழுகை நடத்தி கொண்டிருந்த மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. 

மேலும், வெளிநாட்டு மாணவர்களை நோக்கி, 25 பேர் கொண்ட கும்பல் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு தாக்குதலில், வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக விடுதிக்குள் வருவதற்குள், அந்த கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டது. 

இதனையடுத்து, காயமடைந்த வெளிநாட்டு மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 பேர் கொண்ட கும்பல், விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

சேலம் வரும் பிரதமர்; ட்ரோன்கள் பறக்க தடை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோவையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வர இருக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சேலம் வருவதையொட்டி நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, வையப்பமலை வழியாக சேலம் செல்லலாம் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகையை ஒட்டி 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணிக்கு பிறகு சேலம் விமான நிலையம் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்கு வர இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.