Dinakaran speech about admk and bjp

Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பின் விடுதலையானசசிகலா, கடந்த 8ஆம் தேதி பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பினார். பிப். 8ஆம் தேதி பெங்களூருவிலிருந்து கிளம்பிய சசிகலாவுக்கு அவரின் ஆதரவாளர்கள் வழிநெடுக்க பெரும் வரவேற்பை அளித்தனர். அதனால், பிப். 9ஆம் தேதி காலை சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரைப் பற்றி அதிமுகவின் அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அதற்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பல நேரங்களில் பதில் அளித்துவருகிறார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் நேற்று (14.02.2021) நடந்த திருமண விழாவில் தினகரன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சசிகலா விடுதலைக்குப் பின், தமிழகத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சசிகலா, சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் மன்றத்தில் நிரபராதி.

சதியின் காரணமாக, அவர் சிறைக்குச் சென்றார். தற்போது நடக்கும் ஆட்சி, அதிகாரம் நாங்கள் கொடுத்தது. ஆளுங்கட்சி அதிகாரம் இன்னும்10 - 15 நாட்களில் மாறிவிடும். அ.ம.மு.க.ஆரம்பிக்கப்பட்டதே, அ.தி.மு.க.,வை மீட்கத்தான். தி.மு.க.போன்ற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில், அ.ம.மு.க.உறுதியாக உள்ளது. ‘தினகரன்கூட சென்றவர்கள் எல்லாம், ரோட்டில் நிற்பார்கள்’ என கூறுகின்றனர். தப்பித் தவறி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நாங்கள் ஜாலியாகஎப்போதும் போல் ரோட்டில் நிற்போம். ஆனால், ஆளுங்கட்சியினர் கீழ்ப்பாக்கத்தில் இருப்பார்கள்.

Advertisment

சசிகலா தேர்தலில் போட்டியிட, சட்ட ரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம். வரும் தேர்தலுக்கு முன்போ, பின்போ ஜனநாயக முறையில் அதிமுகவைப் போராடி மீட்டெப்போம். அதில் வெற்றி பெற்றதும், அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் அதுவே எனது விருப்பம்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்துக்கு வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதிமுக, அமமுக இணைப்புக்காக மோடி சென்னை வந்துள்ளதாக வரும் யூகங்களுக்கெல்லாம் பதில் கூற முடியாது.

நான் ஏற்கனவே சிலர் உளருவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டேன். நீங்கள் மீண்டும் என் கருத்தைக் கேட்டால், வசவாளர்கள் வாழ்க எனும் புத்தகத்தில் அண்ணா, “இடுப்பு உடைந்தது, இஞ்சி திண்ணதற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார், அந்தப் பதிலைத்தான் தற்போது நான் உங்களுக்கு சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

சசிகலா தமிழகம் வரும்போது வழிநெடுக்க வரவேற்பு அளித்தவர்கள், தற்போதைய அதிமுக தலைமை மோடிக்குக் கட்டுப்பட்டு இருப்பதாலும், சசிகலா அவ்வாறு இருக்கமாட்டார் எனவும்தான் இவ்வளவு கூட்டம் என ஒருபுறம் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மோடி மீதான தினகரனின் இந்த சாஃப்ட் கார்ணர் கருத்து சசிகலாவுக்குத் தெரிந்துதான் இதைப் பேசுகிறாரா என அவரின் ஆதர்வாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.