Deputy CM Udayanidhi Stalin says Efforts are underway to bring in clan industry scheme

சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள சென்னை கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா இன்று (08-12-24) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகம் சமூக நீதியின் மண்ணாக உள்ளது. குலத்தொழில் திட்டத்தை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. படித்தாலே தீட்டு என்று சொல்லும் காலத்தில் நீ படிக்காவிட்டால் தான் தீட்டு என்று சொல்லி பள்ளிக்கல்விகள் திறந்துவிட்ட கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்றென்றும் போற்றும் வகையில் உள்ளது.

நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று டெல்லியில் ஒரு குரூப் சொல்லிக் கொண்டு இருக்கிறது. 200 வருடத்திற்கு முன்பு சொன்னவர்கள், அதை மீண்டும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் படித்து வெளியே வருவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கல்வி ஒன்றே அழியாத சொத்து, அதை யாராலும் திருட முடியாது என்று சொல்லி நம்முடைய முதல்வர் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என்று டெல்லியில் அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விஸ்வகர்மா என்ற திட்டத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அப்பா என்ன வேலை செய்தாரோ? தாத்தா என்ன வேலை செய்தாரோ அந்த வேலையே பார்க்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் இந்த திட்டத்தை தொடங்கப்படாது என்று நம்முடைய முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.