Skip to main content

டெல்லி கலவரம்... கண்டுகொள்ளாத முதல்வரை கண்டிக்கிறது த.வா.கட்சி... வேல்முருகன் 

 

சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. 18 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.


 

velmurugan
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாவதற்காகவே வீதிக்கு வந்து போராடினால், பின்பு அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்?” இப்படிப் பேசியவர் வேறு யாருமல்ல; உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.


யோகி ஆதித்யநாத் பேச்சை வழிமொழிகிறார் கபில் மிஸ்ரா; இவர் டெல்லி கலவரம் நடந்த பகுதி உள்ளடங்கிய சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றவர்; ஏற்கனவே 2015 தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிறகு 2019இல் பாஜகவில் சேர்ந்தவர்.


இந்த கபில் மிஸ்ரா, “ஜாஃபராபாத், சந்த்பாக் பகுதிகளில் போராடுபவர்களைக் கலைக்க டெல்லி போலீசுக்கு நாங்கள் மூன்று நாட்கள் கெடு விதிக்கிறோம். அதன் பிறகு நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்க மாட்டோம். டிரம்ப் திரும்பிச் செல்லும் வரையில்தான் நாங்கள் அமைதி காப்போம்” என்று டுவிட்டரில் பதிவிட்டதோடு, “ஜாஃபராபாத் போராட்டத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாம் வீதிகளில் இறங்க வேண்டும்” என்றும் கூறியவர்.


 

இவ்வாறு கபில் மிஸ்ரா சொல்லி சிலமணி நேரத்திலேயே அங்கு கலவரம் வெடித்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராடுபவர்கள் மீது போலீசார் மட்டுமல்லாமல் சிஏஏ ஆதரவாளர்களும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீதும் கொடூர தாக்குதல் நடந்தது.


மூன்று நாட்களாக டெல்லியின் ஜாஃபராபாத், சந்த்பாக், மாஜ்பூர், குரேஜிகாஸ், பஜான்பூரா, கர்டாம்புரி ஆகிய பகுதிகள் கலவரக் காடாயின. இதுவரை 18 பேர் பலியாகினர். அதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் என்பவரும் ஒருவர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.


கலவரத்தின்போது 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ணக்கொடி மற்றும் காவிக்கொடிகளை ஏந்தியபடி ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டுச் சென்றனர். அவர்கள் கண்ணில் பட்ட, தங்களுக்கு இடறலாகத் தெரிந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்; பெட்ரோல் பம்புகள் மற்றும் கடைகளைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். முஸ்லிம்களாகப் பார்த்து அடித்தோ சுட்டோ கொன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


கலவரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகள் இருந்ததாகக் குற்றம்சாட்டடப்படுகிறது. அந்த அமைப்புகளும் பாஜகவினரும் மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டுத்தான் இந்தக் கலவரத்தை அரங்கேற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.


இந்தக் கலவரத்தையடுத்து ஜாஃபராபாத் பகுதியில் சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர் என்றது டெல்லி போலீஸ். “வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியில் புதன்கிழமை (26.02.2020) பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். எல்லா மாநிலத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ தேர்வுகளையும் ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார் டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா.

 

டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவாலோ, “வன்முறை வெடித்த தொகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே கலவரம் நீடிக்கக் காரணம்” என்று குற்றம்சாட்டினார். இப்படி அவர் சொல்லக் காரணம், டெல்லி போலீஸ் ஒன்றிய உள்துறையின் கையில் இருப்பதே. ஆனாலும் மூன்று நாட்களாகக் கலவரம் தொடர்ந்தும் அதை முடிவுக்குக் கொண்டுவர அவர் எடுத்த நடவடிக்கையோ முயற்சியோ ஏதுமில்லை என்பதுதான் மொத்த இந்தியாவும் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு.


 

Arvind Kejriwal
எனவேதான் சொல்கிறோம்: சமூகத்திற்கு எந்த வகையிலும் உதவாத மேல்சாதி-மேல்தட்டு மக்களின் ஆர்எஸ்எஸ்-பாஜக, சிஏஏ சட்டத்தால் தனிமைப்பட்டதன் விளைவே, மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவி அடித்தட்டு மக்களைத் தூண்டிவிட்டு டெல்லியில் கலவரத்தில் 18 பேர் பலி!


இதற்குக் காரணமான ஒன்றிய உள்துறையை, அதன் கீழ் உள்ள டெல்லி காவல்துறையை வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தனை நடந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்ற டெல்லி முதல்வரை கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்