Skip to main content

“திருமண விழாக்களில் சாபம் விடுவதுதான் திராவிட மாடலா?” - வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

'Cursing at wedding ceremonies is the Dravidian model?'-Vanathy Srinivasan reviews

 

'திருமண வீடுகளுக்கு சென்று மணமக்களை வாழ்த்துவதை விடுத்து அரசியல் கட்சிகளுக்கு சாபம் விடுவதுதான் திராவிட மடலா?' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், ''இன்று காலையிலே ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட மாநிலத்தினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மணமக்கள் நீடூழி வாழ வேண்டும்; அவர்களுடைய திருமண பந்தத்தில் இணைந்து நீண்ட காலம் இணைந்து தங்களுடைய குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும்' என்ற வாழ்த்துகளை மீறி மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை திருமண விழாவில் வைத்திருக்கிறார். வழக்கமாக நாம் கல்யாணத்திற்கு போகும்போது மணமக்களை வாழ்த்தி விட்டு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு வருவது வழக்கம். அந்த இடத்திலும் பேசலாம் தவறு கிடையாது. ஆனால், வருகின்றவர்களுடைய மனதும், வருகின்ற வாழ்த்துகளும் நேர்மறையாக மணமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

 

அந்த திருமண விழாவில் அமர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகளை வசைபாடுவது, எதிர்க்கட்சிகளுக்கு சாபம் கொடுப்பது இதுதான் இவர்கள் நினைக்கின்ற திராவிட மாடலா? நல்ல இடங்களில் கூட போய் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுவதை அநாகரீகமான ஒன்றாகப் பார்க்கிறோம். மத்திய அரசை பற்றி, பாஜகவை பற்றி, மோடியை பற்றி அவர் கூறியிருக்கிறார். பிரதமர் மோடி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பேசியது என்பது 100 சதவீதம் உண்மையான ஒன்று. அவர் எங்கும் பொய் பேசவில்லை. எந்தெந்த மாநிலங்களில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்பதை விளக்கமாக ஒவ்வொரு பெயரையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். நீங்கள் அப்படி குடும்ப ஆட்சி நடக்கவில்லை என்று சொல்லுங்கள்.

 

எங்கள் குடும்பத்தில் இருந்து நாங்கள் வாரிசு என்கின்ற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை அல்லது நான் வகித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் யார் உழைக்கின்ற தொண்டனாக இருந்தாலும் ஒருநாள் அடைய முடியும் என்பதை வெளிப்படையாக கூறுங்கள். உங்களால் சொல்ல முடியுமா? உங்கள் அமைச்சரவை சகாக்களிலேயே உங்களுடைய மகனாக இருக்கின்ற காரணத்தினால் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதீதமான முக்கியத்துவம். அந்த முதல் நாற்காலியை உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக வைத்துக் கொண்டு பாஜகவை குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்று காட்டமாக விமர்சித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு!

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Chhattisgarh Chief Minister Vishnu Deo Sai

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அம்மாநில பாஜக தலைவர் விஷ்ணு தியோ சாய் பதவியேற்க உள்ளார். சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விஷ்ணு தியோ சாய் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக விஷ்ணுதேவ் சாய் பணியாற்றியவர் ஆவார். அதே சமயம் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.