Skip to main content

பொய் வழக்கு, கள்ளச்சாராயம், அரசு பணத்தைக் கொள்ளையடிக்கும் அ.திமு.க.வினர் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்...! -கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கலெக்டரிடம் மனு...

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

Erode

 

ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அரசுப் பணிகளில் அப்பட்டமாக கொள்ளையடிப்பதாகவும் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியதோடு அதைப் பட்டியல் போட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுவாகவும் கொடுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் திருப்பூர் தொகுதி எம்.பி.யுமான திருப்பூர் சுப்பராயன். 

 

இன்று மாலை அவர்  தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சியினரோடு ஈரோடு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது,

 

"ஈரோடு மாவட்டம் நம்பியூரில் சென்ற ஐந்து ஆண்டுகளாக ஆளும் அ.தி.மு.க.வினர் தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தொடர்ச்சியாக மக்கள் விரோதச் செயல்களில் ஈபட்டு வருகிறார்கள். அங்கு கள்ளச்சாரயம் விற்பனையில் தொடங்கிய இந்த ஆதிக்கம், அப்பாவி பொது மக்களைப் பழிவாங்க அநியாயமாகப் பொய் வழக்கும் போடுகிற நிலைக்கு வந்துள்ளார்கள்.

 

குறிப்பாக நம்பியூர் பகுதியில் வசதி படைத்தவர்களை மிரட்டி, ஆளும் அ.தி.மு.க. கட்சியில் சேர வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்தக் கட்சியில் சேர மறுப்பவர்களின் சொத்துகளைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளையும் செய்கிறார்கள். குப்பிபாளையம் என்ற கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது.

 

Erode


நம்பியூர் பஸ் நிலையம் நல்ல நிலையில் இருந்தது. கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்டிடங்களை இடித்து விட்டு கமிஷனுக்காக ரூபாய் 6 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டி மக்கள் பணத்தை விரயம் செய்துள்ளார்கள். நம்பியூர் பேரூராட்சி, நம்பியூர் ஒன்றியங்கள் மூலம் கொசு மருந்து அடித்ததாக பல கோடி ரூபாய்க்கு பொய்க் கணக்கு எழுதி முறைகேடு செய்துள்ளார்கள்.

 

செட்டியம்பதி குளத்தில் இருந்து நம்பியூர் பஸ் நிலையம் வழியாகச் செல்லும் பள்ளம், நீர்வழிப்பாதையாகும். அதை அடைத்துவிட்டு சைக்கிள் நிறுத்தம் கட்டியுள்ளார்கள். மழைக்காலத்தில் இந்த ஓடைப்பள்ளம் அடைப்பால் நம்பியூர் பகுதி முழுக்க நீர் சூழ்ந்து அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்படும். இந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் குளங்களில் இருந்தும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மண் வியாாரிகள் டிப்பர் லாரிகளில் மண் கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இந்தக் கடத்தலை தடுப்பதோடு உள்ளூர் விவசாயிகள் மண் அள்ள அனுமதியும், பாதுகாப்பும் மாவட்ட  நிர்வாகம் வழங்க வேண்டும்.

 

அதே போல் நம்பியூர் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் அனுமதி இல்லாத மது விற்பனை நிலையங்கள் ஏராளமாகச் செயல்படுகிறது. நம்பியூர் பகுதியிலேயே போலி மது தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் குடிமகன்களில் உடல் மற்றும் உயிருக்கு பேராபத்து ஏற்படும். மேலும், இந்தக் கள்ள மது தயாரிப்பவர்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் தான். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.