Skip to main content

''தாங்க முடியவில்லை... பாஜகவில் இருந்து விலகுகிறேன்''-நள்ளிரவில் டாக்டர் சரவணன் பேட்டி!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

bjp

 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில்  நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.  

 

bjp

 

இந்நிலையில் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து  நேற்று நள்ளிரவு செய்தியாளர்களைச் சிந்தித்து பேசிய டாக்டர் சரவணன், ''நானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த போது வெளியே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடந்து விட்டது. வீட்டிற்குப்போன பிறகு மன உறுத்தலாகவே இருந்தது. பிறகு தெளிவு பெற்றது. அமைச்சர் வெளிநாட்டில் படித்தவர் அதனால் அவருடைய தமிழ் அந்த அளவுக்கு இருக்கிறது. 'எந்த தகுதி' என அவர் கேட்பது இங்கிருக்கும் புரோட்டோகால். வீரரின் உடலை கவர்மெண்ட் ரிசீவ் செய்து அவங்க ஊருக்கு அனுப்புகிறோம். அவங்க வீட்டில் போய் மரியாதை செலுத்தலாம், அவர்களது கிராமத்தில் போய் மரியாதை செலுத்தலாம் அந்த அர்த்தத்தில் அவர் சொல்லி இருக்கிறார். வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மன்னித்து விடுங்கள். நான் இனி பாஜகவில் தொடர மாட்டேன். எனக்கு இந்த மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. பாஜகவில் நான் தொடர போவதில்லை காலையில் ராஜினாமா கடிதம் அளிக்கப் போகிறேன். திமுகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டால் நிச்சயமாக சேர்ந்தால் தப்பில்லை. திமுக எனது தாய் வீடு தானே என்று சொல்ல வருகிறேன். இங்கு உள்ள மத அரசியல் என்பது கடுமையாக இருக்கிறது. நான் ஒரு மருத்துவராக எல்லாருக்கும் பொதுவான மனிதராக இருக்க நினைக்கிறேன். எனவே துவேசத்தை என்னால் செய்ய முடியவில்லை. தாங்க முடியவில்லை'' என்றார்.

 

முன்னதாக நேற்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து பேசி இருந்த டாக்டர் சரவணன் நள்ளிரவு அமைச்சரை சந்தித்த பிறகு அவர் பேச்சில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.