Skip to main content

“ராகுல் பிரதமரானால் ஊழல் இந்தியாவின் தலைவிதியாக மாறும்” - அமித்ஷா

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

“Corruption will become India's destiny if Rahul becomes PM” - Amit Shah

 

பாஜக ஆட்சியில் அமர்ந்து 9 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசின் 9 ஆண்டுக் கால சாதனைகளை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, தமிழகத்தைச் சார்ந்தவர்கள் பிரதமர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். இதனிடையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், காங்கிரஸ், பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலை எதிர்கொள்ள பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் நடைபெற்ற  பாஜக அரசின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

 

அந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “பிரதமர் மோடி தலைமையில் இந்த 9 ஆண்டுக் கால ஆட்சியில் இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை அமைக்க எதிர்க்கட்சியினர் பாட்னாவில் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே ஊழலில் ஈடுபட்டவர்கள். அவர்கள் யாரும் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பவில்லை.

 

சோனியா காந்தியின் குறிக்கோள் தனது மகனான ராகுல் காந்தியை பிரதமராக்குவது. அதே போல், லாலு பிரசாத்தின் குறிக்கோள் அவரது மகன் தேஜஸ்வி யாதவை முதல்வராக்குவது தான். மம்தா பானர்ஜியின் நோக்கம் அவரது மருமகன் அபிஷேக்கை முதல்வராக்குவது தான். அதே போல், அசோக் கெலாட் அவரது மகன் வைபவை முதல்வராக்க வேண்டும் என்பது தான் அவரது குறிக்கோள். இப்படி ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை ஆட்சியில் அமர்த்துவது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனர். 

 

ஒருவேளை, ராகுல் காந்தி பிரதமரானால் ஊழலும் மோசடியும் தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும். இதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமரானால் ஊழல் செய்தவர்களும் மோசடிக்காரர்களும் சிறைக்குள் செல்வார்கள். நான் இந்தியா முழுவதும் பாஜகவின் 9 ஆண்டுக் கால சாதனை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக் பயணம் செய்துள்ளேன். அதில் மக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில் பாஜக 300 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் மோடி பிரதமராகப் போவது உறுதி” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்