Skip to main content

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
corona

 

காய்ச்சல் அறிகுறி இருந்தால் கரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக தேவையில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கிறது. சிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினாயகம் என்ற 42 வயது இளைஞர் கவுதம் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி, கடுமையான உழைப்பு காரணமாக வாழ்க்கையில் முன்னேறி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், உடனடியாக  உள்ளூர் தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெறச் சென்றபோது, அவருக்கு சாதாரண காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளனர். அந்த மாத்திரைகளை சாப்பிட்ட போதிலும், காய்ச்சல் குணமடையாத நிலையில், அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா சோதனை செய்யாமல் டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன.

டைபாய்டு காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்ட பிறகும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வினாயகம் சென்றுள்ளார். அங்கும் அதே நடைமுறைகள் செய்யப்பட்டு, காய்ச்சலுக்கான மருந்துகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  அப்போதும் காய்ச்சல் குறையாத நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை தனிமைப்படுத்தி கரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், அவருக்கு நோய் முற்றியிருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை; சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.

வினாயகம் முதன்முதலில் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றபோதோ அல்லது அடுத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றபோதோ அங்கு அவருக்கு கரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், புறநோயாளி என்பதால் அவருக்கு கரோனா ஆய்வு செய்வதற்கு மாற்றாக, மருத்துவமனையில் சாதாரண டைபாய்டு காய்ச்சலுக்கான சோதனை செய்து, அதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்ததால்தான், அவருக்கு ஏற்பட்டிருந்த கரோனா நோய் முற்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளின் அலட்சியத்தால், இப்போது ஒரு குடும்பம் தலைவனை இழந்து தவிக்கிறது.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், சுவை மற்றும் மணத்தை உணரும் தன்மையின்மை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓரிரு அறிகுறிகள் தென்பட்டால்கூட, உடனடியாக கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதற்கு முன் மருத்துவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். காய்ச்சல் என்பது கரோனா வைரஸுக்கான அறிகுறி என்பதால், காய்ச்சலுடன் ஒருவர் எந்த மருத்துவமனைக்கு வந்தாலும், அவருக்கு கரோனா ஆய்வு செய்வதுதான் முதல் பணியாக இருக்க வேண்டும். ஆனால், அதை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருந்ததால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் காட்டப்படும் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்தது இது மட்டுமே தனித்த நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை. சரியான நேரத்தில் கரோனா ஆய்வு செய்யாததால் வினாயகத்தைப் போல பலர் உயிரிழந்திருக்கக்கூடும். இது தடுக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சோதனைக்காக அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு செல்லும்போது, அவர்களுக்கு கரோனா ஆய்வு செய்யப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட ஆய்வகங்களில் அந்த வசதி இல்லை என்றால் அருகிலுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், அவை எதையும் செய்யாத தனியார் ஆய்வகங்கள், ரத்த ஆய்வு மட்டும் செய்து விட்டு டைபாய்டு காய்ச்சல் இருப்பதாகக் கூறி அனுப்பி விடுகின்றனர். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர வருபவர்களுக்கு முதல் பணியாக கரோனா ஆய்வு செய்யப்பட்டு, அதன்பிறகுதான் மருத்துவனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நடைமுறை புறநோயாளிகளுக்கும் கடைபிடிக்கப்பட வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கரோனா ஆய்வு செய்யும் வசதி இல்லை என்றால், அருகிலுள்ள கரோனா ஆய்வு மையத்திற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவுகளுக்கும் தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் உரிய அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.