E.R.Eswaran

எதிர்பார்த்த அளவிற்கு கரோனா பரவல் இந்தியாவில் வேகம் எடுத்திருக்கிறது. மக்கள் சுய கட்டுப்பாட்டோடு தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பரவல் தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இன்னும் நோய் தீவிரத்தை முழுமையாக உணர்ந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அரசாங்கமோ, அதிகாரிகளோ தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment

நம்மை காப்பாற்றுவார்கள் என்று மக்கள் நினைத்தால் ஏமாந்து போவோம். பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாவதோடு உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு இருக்கிறது. கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக அறிவிப்பது மட்டும் நோய் பரவலை கட்டுப்படுத்தாது. மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உயிர் முக்கியம் என்ற பயத்தோடு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் மட்டும் தான் தமிழகத்தை பாதுகாக்க முடியும்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 12,000 பேர் பாதிக்கப்படுவதும், 300-க்கும் மேற்பட்டோர் இறந்து போவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50,000 பேர் பாதிப்பும், 1000 பேர் உயிரிழப்புமாக மாற வெகுதூரமில்லை. தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கை கொடுப்பதற்கு தமிழக அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. படுக்கையே இல்லை என்கின்ற நிலை தமிழகம் முழுவதும் ஏற்படக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு கூட இடம் பற்றாக்குறை வெகு சீக்கிரம் ஏற்படும்.

Advertisment

எப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெகு தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்த அரசு அதிகாரிகள் அரசே கவலைப்படாமல் வருமானத்திற்காக டாஸ்மாக்கை திறக்கும் போது நாங்கள் மட்டும் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டுமா என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

நோயின் தீவிரத்தை தொலைக்காட்சிகளில் மட்டும் பேசிவிட்டு முதலமைச்சரும், அமைச்சர்களும் அரசு விழாக்கள் என்ற பெயரில் கட்சி பணிகளில் களமிறங்கி இருப்பதை பார்க்கும் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் முதலில் காட்டிய தீவிரத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிரிழப்புகள் அதிகமாவதற்கு காரணம் இதுதான். இனி அரசை நம்பி பிரயோஜனம் இல்லை. மக்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.