Congress youth in charge who challenged Annamalai

Advertisment

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம்சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்றுநடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதில், காங்கிரஸ் இளைஞர் அணி மாநிலச் செயலாளராக தரமணி ஆர். விமல், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜோஸ்வா ஜெரால்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் சார்பில் வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குதல். ‘சூப்பர் சக்திஷீ’ என்ற திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை வாரியாக அதிக பெண்கள்கட்சியில் சேர்க்கப்படுவர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சமூக வலைத்தளத்தை முறையாகப் பயன்படுத்த சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு வெறும் வாய்வார்த்தை மட்டும் தான் பேசுகின்றது. ஆனால், பெண்கள் பாதுகாப்பில் மத்திய அரசு எந்தவித கவனமும் இதுவரை செலுத்தவில்லை. இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைந்துவிட்டார்.

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் 20 நாள்களுக்கு மேலாக நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் நடைபயணம் என்று சொல்லிக்கொண்டு சொகுசு பயணம் தான் செய்து கொண்டிருக்கிறார். இந்த நடைபயணத்தின் போது கடந்த 9 ஆண்டு கால ஆட்சி காலத்தில் பா.ஜ.க அரசின் சாதனை குறித்து ஒரு இடத்தில் கூட வாய் திறக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் எந்த சாதனையும் செய்யவில்லை. நான் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டு மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிட நான் தயார். அதை ஏற்று, பிரதமர் மோடி செய்த சாதனைகளை பட்டியலிட அண்ணாமலை தயாராக இருக்கிறாரா?” என்று கூறினார்.