/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cong-meet-art.jpg)
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். இதன் ஒரு பகுதியாக நாளை (09.06.2024) இரவு 07.15 மணிக்குப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் தேர்தல் முடிவுகள் குறித்தும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)