விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து ஊக்கத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கினார்.
கல்வி விருது விழா என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அப்போது, மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நிறையப் படிக்க வேண்டும். முடிந்த வரைக்கும் எல்லா தலைவர்களையும் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிப் படியுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விழாவில் இன்றைய மாணவர்கள்தான் நாளைய வாக்காளர் என்று விஜய் பேசியிருந்தது அரசியல் காரணத்திற்காகத்தான் இந்த விழா நடத்தப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய் உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி கூறும்போது, “விஜய் தற்போதுதான் தனது முதல் புள்ளியை தொடங்கியிருக்கிறார். மாணவர்களின் கல்விக்கு உதவி செய்கிறார். விஜய் முன்பிருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தற்போதுதான் அதனை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். வரும் காலங்களில்தான் இதைப் பற்றி சொல்ல முடியும்” என்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யுடன் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் வசந்த், “அதைப் பற்றி எல்லாம் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுதான். அவர் அப்படி வருவதாக இருந்தால் விஜய் உடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.