தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதிக்கு பிறகு அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி அண்மையில் காங்கிரஸ் கட்சி தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்தில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்கள் இறுதி செய்யப்பட உள்ளன. எனவே இந்த கூட்டத்தில் இது குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.