ஊரக உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் திமுக அமைச்சர்கள், 100 சதவீத வெற்றியை பெறுவதற்காக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்படைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், ‘’திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்படக் கூடாது. சோர்வடைந்து விடக் கூடாது. முழுமையான வெற்றிக்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சீட் கிடைக்கவில்லையே என கவலைப்படாதீர்கள். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் சங்கங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு விடும். புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்களுக்கு சங்களின் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும். அதே போல வாரியங்கள் எல்லாம் கலைக்கப்பட்டு அதில் உங்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.
அதேசமயம், கட்சிக்கு துரோகமிழைப்பவவர்கள் யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். கட்டம் கட்டப்படும். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ’’ என்று எச்சரிக்கை செய்தார் துரைமுருகன்.
சீட் கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களிலும் , வாரியங்களிலும் பதவிகள் கொடுக்கப்படும் என்று துரைமுருகன் சொல்லியிருப்பது திமுக நிர்வாகிகளிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மேலும், அதிர்ப்தியில் இருந்த திமுகவினருக்கு துரைமுருகனின் அந்த வாக்குறுதிகள் தெம்பைக் கொடுத்திருப்பதாக வட மாவட்ட திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.