Skip to main content

“எங்கள் காதுகள் பாவம் இல்லையா?” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
CM Stalin's speech at election campaign in vadachennai for lok sabha election

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன. 

தமிழகத்தில் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அந்த வகையில், திருவள்ளூர் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். 

இந்த நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்  கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வுக்கும், வட சென்னைக்குமான உறவு தாய் - சேய் உறவு போன்றது. என்னை முதலமைச்சராகிய கொளத்தூர் தொகுதியை உள்ளடக்கியது வடசென்னை.

பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார். கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. 

பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறிய வாக்குறுதிகளைப் பாஜக நிறைவேற்றியதா? இந்தியாவில் இதுவரை 14 பேர் பிரதமராக இருந்துள்ளனர். ஆனால் மோடி போல் மோசமான பிரதமர் யாருமில்லை. விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி பணம் வசூலித்து வசூல்ராஜாவாக மோடி திகழ்கிறார். தொழில் முனைவோர்களையும் மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்குவது பாஜகவின் வாடிக்கை.

இதுவரை இருந்த பிரதமர்களில் மோடியைப் போன்ற மோசமான பிரதமரை நாடு பார்த்ததில்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை வைத்து கட்சிகளை உடைப்பது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, முதல்வர்களை கைது செய்வதைத்தான் மோடி செய்கிறார். விவசாயிகளுக்காக எந்த ஒரு வாக்குறுதியையும் பாஜக வழங்கவில்லை. வாக்குக்காக மலிவான அரசியலை மோடி செய்து வருகிறார். நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் சுய விளம்பரத்துக்கு மட்டுமே மோடி முக்கியத்துவம் தருகிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மோடியல்ல யாருமே முடிவு செய்யக்கூடாது.

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய சிறு, குறு தொழில்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. சிறு, குறு தொழில்துறை சரிவை சரிசெய்ய மோடி நடவடிக்கை எடுத்தாரா? தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிய போது மோடி ஏன் மௌன குருவாக இருந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையை தேர்தலுக்கு முன்பே கட்டி முடித்து விடுவோம் என்று எண்ணம் மோடிக்கு வந்ததா? வெறும் ரோடு ஷோ மட்டும் காட்டிவிட்டு செல்வதற்கு பிரதமர் மோடி வெக்கப்பட வேண்டாமா? கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 10.5 லட்சம் கோடி கொடுத்துள்ளதாக பச்சை பொய் சொல்லி விடுவது பாஜக. மெட்ரோ திட்ட பணிகள் நின்று விடக்கூடாது என்பதற்காக மாநில அரசே நிதி ஒதுக்கி செலவு செய்கிறது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மோடி அரசு நிதி தராமல் இழுத்து அடித்து இருக்கிறது. மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டு ரூ.2 லட்சம் கோடியை கொடுத்து விட்டோம் என்கிறது பாஜக. எத்தனை பொய்களைத்தான் எங்கள் காதுகள் தாங்கும்? எங்கள் காதுகள் பாவம் இல்லையா? 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளையும் மோடி பட்டியலிட தயாரா? ஏழை மக்களுக்காக பார்த்து பார்த்து பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். மற்றொரு பக்கம் ஏழை மக்களே நடுத்தெருவில் நிறுத்துவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டியை விதித்து ஏழை மக்களிடம் கருணையற்ற வகையில் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்கிறது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.