Skip to main content

“அண்ட புளுகு, ஆகாச புளுகு என்பதைப்போல் இது மோடியின் புளுகு” - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Chief Minister M.K.Stal's criticized prime minister modi

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13-03-24) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அதன் பிறகு, பொள்ளாச்சி பகுதிக்கு சென்ற அவர், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 57,325 பேருக்கு ரூ.1,273 கோடி செலவில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதே போல், ரூ.490 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 

அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவை மாவட்டத்துக்கு 13 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடுகிறேன். அதில், தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பை நீக்க ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டித் தரப்படும். காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியில் சாலை அமைத்து தரப்படும். பெரியநாயக்கன்பாளையம் உட்பட 4 ஊராட்சி ஒன்றியத்தில் பாலங்கள் கட்டித் தரப்படும். 

ரூ.2.8 கோடி செலவில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதே போல், ஈரோடு மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ஈரோட்டில் ரூ.15 கோடி செலவில் வ.உ.சி பூங்கா தரம் உயர்த்தப்படும். 8 சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்படும். 

வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?. அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?. மேற்கு மண்டலம் எங்கள் கோட்டை என்று கூறும் அதிமுக மக்களுக்கு என்ன செய்தது?. பெற்றோரை பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா?. கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சரும், டி.ஜி.பியும் இருந்தது யார் ஆட்சியில்?. தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது அனைத்தும் அதிமுக ஆட்சியில் தான். 

அதிமுக, பா.ஜ.க கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது. நாட்டுமக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர், மோடியின் உத்தரவாதம் என பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார். தமிழ்நாட்டுக்கு என்ன செய்தீர்கள் என்று பட்டியல் போட்டு பிரதமரிடம் மக்கள் கேட்க வேண்டும். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரும்போதல்லாம், மத்திய அரசு கொண்டுவரும் திட்டத்தை திமுக எதிர்க்கிறது என்று கூறுகிறார். எந்த திட்டத்துக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் சொல்ல முடியுமா? ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது அப்பட்டமான பொய். அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதைபோல் இது மோடியின் புளுகு. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நாங்கள் தடுத்தோமா? அல்லது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தடுத்தார்களா? பா.ஜ.க.வின் பொய்யும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்