தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று (09.12.2024) காலை 09.30 மணிக்குத் தொடங்கியது. அப்போது, மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தைத் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதன்படி இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தனி தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று (10-12-24) தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கூடியது. அப்போது, உ.வே.சாமிநாதரை கெளரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளின் போது தமிழகத்தில் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டமன்றத்தில் உரையாற்றியதாவது, “டாக்டர் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் கே.பி முனுசாமி ஒரு கோரிக்கை வைத்து முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரது கோரிக்கையை ஏற்று நிச்சயமாக வரக்கூடிய காலகட்டங்களில் உ.வே.சாமிநாதர் பிறந்தநாளை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.