Skip to main content

தியாகம் செய்தவர்களை தூக்கிவீசுவதா? சென்னை மாநகராட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

ddd


 
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் அச்சத்துடன் இருந்த வேளையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள். பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணி என்பது மிகவும் அசாதாரணமானது. 

 

அந்தப் பணிகளின் காரணமாகவே அவர்களில் ஏராளமானவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகினர், பலர் உயிரிழந்தனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது சுகாதர பணிகளின் மேற்கொண்ட அவர்களைப் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அவர்களின் பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த சுமார் 700 பேர், எவ்வித நோட்டீஸூம் அளிக்காமல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனியாருக்கு நகரின் தூய்மை பணியை தாரை வார்த்து, 10 வருடங்களாக நகரின் தூய்மைப் பணிக்காக தியாகம் செய்தவர்களைத் தூக்கிவீசுவது கண்டிக்கத்தக்கது.

 

கரோனா பெருந்தொற்று காலத்தில் போற்றப்பட வேண்டியவர்களாக அரசால் சுட்டிக்காட்டப்பட்டவர்களை, இன்று அந்த அரசே போய் வாருங்கள் என தூக்கி வீசுவது உள்ளபடியே வேதனை அளிக்கின்றது.

 

ஆகவே, பணி நீக்கம் செய்யப்பட்ட 700 தொழிலாளர்களின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, கொரோனா முன்களப் பணியார்களான அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.’ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.