Skip to main content

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Anbumani Ramadoss


காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கவிடப்பட்டு வந்தது. இதைத் தடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்க விடப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், காவிரியில் கழிவு நீர் கலப்பது முடிவுக்கு வந்தது. காவிரி ஆறும் தூய்மையடைந்தது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஆலைகள் செயல்பட அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆலைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பதை ஈரோடு மாவட்டத்திலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் விளைவாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான காரநெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 


இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள எதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாகப் போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழகத்திற்குள் வந்த பிறகு மேட்டூரிலேயே காவிரியை கழிவுநீர் கால்வாய் ஆக்கும் பணிகள் தொடங்கிவிடுகின்றன. அங்குள்ள கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. மேட்டூரில் உள்ள பிற ஆலைகள், ஈரோடு, கரூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவிரியில் கழிவுகள் கலக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் காவிரியில் மக்கள் புனித நீராடும் தலமாக திகழ்கிறது. ஆனால், அங்கு தான் காவிரியில் மொத்தம் 52 வகையாக நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆற்றில் குளிப்பவர்களுக்கும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும். காவிரி கழிவுநீர் தொட்டியாக்கப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காவிரியைத் தூய்மைப்படுத்த வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘‘கரம் கோர்ப்போம் & காவிரி காப்போம்’’ என்ற பெயரில் காவிரியைக் காக்க வலியுறுத்தி ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன்.

அதன்பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற பெயரிலான திட்டத்தைத் தமிழக அரசு, தயாரித்து மத்திய அரசின் நிதியைக் கோரியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு, காவிரியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாறாக, காவிரியை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் கழிவுநீரைக் கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும்.
 

http://onelink.to/nknapp


காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்வதால், அதைக் காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் ரூ.20,000 கோடியைச் செலவிடவுள்ளது. அதேபோல், காவிரியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.