நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது
அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக நேற்று (03.03.2024) அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரிக்கு இன்று (04.03.2024) வருகை தந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பா.ஜ.க.வினர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜகவினர் தெரிவித்த 3 வேட்பாளர்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரும் இடம் பெற்றிருந்த நிலையில், மற்ற இரு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.