alliance Breaking the is a decision taken by ADMK members says EPs

Advertisment

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் மௌனம் காத்து வந்தனர்.

இந்நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து பேசுகையில், “அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற முறையில் நான் எடுத்த முடிவு இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவு. தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலேயே ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி முறிவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் கூறவில்லை என கூறுகிறார்கள். ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகிறது என்றால் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அதுதான் இறுதி முடிவு.

Advertisment

alliance Breaking the is a decision taken by ADMK members says EPs

தமிழக மக்கள் தான் எஜமானர்கள். எனவே தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது தான் அதிமுக லட்சியம். தேசிய கூட்டணியில் இருக்கும் போது தேசியக் கட்சி எடுக்கும் முடிவுகளில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நாம் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதை நிறைவேற்றுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். இனி அது போன்ற நிலைமை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்”என தெரிவித்தார்.