publive-image

கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Advertisment

இதன்பின் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆன்லைன் சூதாட்ட விளைவுகளை ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 26-இல் தமிழக அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டத்திற்கான அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரும் ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

Advertisment

இச்சட்டம் நேற்று முன் தினத்துடன் 60 நாட்கள் முடிந்து காலாவதியானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காததால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு தடையில்லாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், எம்.பி.கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கவர்னர் பதவி என்பதே காலாவதியான விஷயம் தான் என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு உள்ளோம். அது இல்லையென்றால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும். எது முதலில் செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிய வேண்டும். கவர்னர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று. அந்தப் பதவி இல்லாமல் போனாலே பல சிக்கல்கள் இன்று தீர்ந்துவிடும். எதற்காக ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க இவ்வளவு துடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறினார்.