தமிழ்நாட்டில் விடுப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு, மாவட்டக்குழு கவுன்சிலர்கள் ஆகியோர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு தலைவருக்கான மறைமுகத்தேர்தல் மூலம் மாவட்டக்குழு, ஒன்றியக்குழு தலைவர் தேர்வும், மதியம் 2 மணிக்கு துணைத்தலைவர் தேர்வும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ள பெருந்திட்ட வளாகத்திலும், ஒன்றியக்குழு அலுவலகத்திலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் 11 கவுன்சிலர்கள் வெற்றிபெற்றுள்ளனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகள் திமுகவுக்கு சுலபமாக கிடைக்கும். இந்நிலையில், சேர்மன் பதவிக்கு திமுக சார்பில் காயத்ரி பிரபாகரன், சங்கீதா பாரி என இருதரப்பு மோதுகிறது. கவுன்சிலர்கள் பதவியேற்றுக்கொண்டு திரும்பியபோது இருதரப்பும் கவுன்சிலர்களை கடத்த மோதிக்கொண்டனர். இது திருப்பத்தூர் மாவட்டத்தையும் தாண்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இருதரப்பைச் சேர்ந்த கவுன்சிலர்களின் குடும்பத்தார் மாறிமாறி புகார் தந்துள்ளனர்.
இந்நிலையில், அக்டோபர் 21ஆம் தேதி ஆலங்காயம் ஒ.செவும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான சம்பத்குமார், ‘திமுகவினர் ஆலங்காயம் தேர்தலில் அதிமுகவினர் வாக்களிக்கவிடாமல் செய்வதற்காக 200 பேரைக் களமிறக்கியுள்ளனர். இதனால் எங்கள் கவுன்சிலர்கள் வாக்களிக்காமல் தடுக்கப்படவும், உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுகிறது. எங்கள் கவுன்சிலர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தந்துள்ளார். இதனால் ஆலங்காயம் பரபரப்பாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th 2.jpg)
அதனைத் தொடர்ந்து காவல்துறை, ஆலங்காயம் வரும் அத்தனை சாலைகளையும் அடைத்து சீல் வைத்துள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 1 கி.மீ வெளியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு மக்கள் இறங்கி நடந்து செல்ல வைக்கப்படுகிறார்கள். இதனால் ஆலங்காயம் நகரமும், ஒன்றியக்குழு அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கிறது.
கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது நடந்ததுபோல் மோதல் நடந்துவிடக் கூடாது என 100க்கும் அதிகமான காவலர்களைக் குவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமாகச் செய்துள்ளது காவல்துறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)