சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றும்(9.12.2024), நாளையும்(10.12.2024) நடைபெறுகிறது. முதல்நாளான இன்று சட்டப்பேரவை கூடிய உடன், மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெஞ்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்வியாலும், அதற்கு அமைச்சர்கள் கொடுத்த பதிலாலும் சட்டமன்றமே பரபரப்பாகவும், சபாநாயகரின் பேச்சால் கலகலப்பாகவும் இருந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் எதையுமே கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணன், தற்போது அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று பரபரப்பான சூழலில் சட்டமன்றத்தில் கேள்வி நேரம் நடந்துகொண்டிருந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.