ஆத்தூர் அருகே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்கக் கோரி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சின்னத்தம்பி. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான இவருக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் உலா வருகின்றன.
இந்நிலையில் அவர், ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயிலில், மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டி, செவ்வாய்க்கிழமை (பிப். 16) இரவு சிறப்பு யாகம் நடத்தினார். இந்தக் கோயிலில், அமாவாசை முடிந்து 5ம் நாள் வளர்பிறை திதியில் பக்தர்கள் யாகம் நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
புதிய சொத்துகள் வாங்குதல், இழந்த பதவியை மீண்டும் பெறுதல், பல ஆண்டாக இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் தீர்வு காணுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினால் நல்லபடியாக கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் செல்லியம்மன் கோயிலில் அரசியல்வாதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வேண்டிக்கொண்டு யாகம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தான் சின்னதம்பி, பிப். 16ம் தேதி, கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினார். மீண்டும் கட்சியில் சீட் கிடைத்து, எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து யாகமும், சிறப்பு பூஜைகளும் அவர் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் அதிமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.