அதிமுகவைச் சேர்ந்த ராதாமணி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கோவையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக வாக்கெடுப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் 9 கவுன்சிலர்களும், திமுகவின் 6 கவுன்சிலர்களும், பாரதிய ஜனதா கட்சியின் 2 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக இருந்த அமுல் கந்தசாமி ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான மறைமுக தேர்தல் துவங்கியது. அதிமுக சார்பாக ராதாமணியும், திமுக சார்பாக ஆனந்தனும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தனர்.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் வளாகத்தின் முன்பு ஏராளமான அதிமுக வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெளிநடப்பு செய்வதாகவும், தேர்தல் சுதந்திரமாக நடக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என கூறி திமுக கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். அதிமுக வழக்கறிஞர்கள் தேர்தல் நடைபெறும் அறையின் அருகில் அமர்ந்துகொண்டு சுதந்திரமாக தேர்தல் நடக்கும் சூழலைக் கெடுப்பதாக கூறி வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள், கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர். இதனிடையே, திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ராதாமணி போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ராதாமணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.