AIADMK candidate selection; Submission of documents to Election Commission

Advertisment

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் தனது வேட்பாளரை அறிவித்த இபிஎஸ் பிப்ரவரி 7ல் வேட்புமனு தாக்கல் செய்வார் எனக் கூறி தென்னரசுவின் வேட்புமனுவை ஒத்திவைத்தார்.

இதனிடையே அதிமுகவின் பொதுக்குழு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக அவைத்தலைவர் வேட்பாளர் தேர்வில் தமிழ்மகன் உசேன் நெறிமுறை தவறி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டி இருந்தது.

இன்று காலை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை டெல்லி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இன்று காலை டெல்லி புறப்பட்டனர். அதேசமயத்தில் பசுமை வழிச்சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் ஒரு மணி நேரமாக பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Advertisment

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தரப்பு, “நாங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்ற காரணத்தினால் இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதால் எங்களது வேட்பாளர் செந்தில் முருகன் தேர்தலில் இருந்து விலகுகிறார். இரட்டை இலை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விலகுகிறார். தென்னரசுக்கான பிரச்சாரம் அல்ல. இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வோம். இரட்டை இலை வெற்றி பெற வாக்களியுங்கள் என்று கேட்போம்” எனக் கூறினர்.

இந்நிலையில், டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் அதிமுக வேட்பாளராக தென்னரசு வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.