உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வடசென்னை அதிமுக வேட்பாளர் மனோவை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, வடசென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில் திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் 600 பெண்கள் கருப்பு புடவை அணிந்து ஜெயலலிதாவின் முகம் பதித்த போட்டோவை முகத்தில் அணிந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது, விலைவாசி உயர்வைப் பட்டியலிட்ட பதாகைகளுடன் அரிசி, பருப்பு, பூண்டு உள்ளிட்ட மளிகை பொருட்களை கழுத்தில் மாலையாக தொங்கவிட்டபடி இ.பி.எஸ் போட்டோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனங்களில் இரு பெண்கள் அமர்ந்து கையில் அ.தி.மு.க. கட்சி நிறம் கொண்ட பலூன்களுடன் பேரணியாக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தொகுதி முழுக்க தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
பேரணி ஊர்வலமானது 47 - வது வட்டம் கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு ஹரிநாராயணபுரத்தில் தொடங்கப்பட்டு, கிளாஸ் பாக்டரி, கே.எச்.சாலை இ.எச்.ரோடு வைத்தியநாதன் மேம்பாலம், இளைய முதலிதெரு, வ.உ.சி நகர் மெயின் ரோடு, மார்கெட் தெரு, சேனியம்மன் கோவில் தெரு, ஜீவாநகர், எல்.ஐ.ஜி.காலனி, ஏ.இ.கோவில் தெரு, தியாகி பெருமாள் தெரு, டி எச் ரோடு, வீரராகவன் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, ஜீவரத்தினம் சாலை, வரதராஜ பெருமாள் கோவில், இரட்டைக் குழி தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தியாகப்பத்தெரு, மண்ணப்ப முதலி தெரு ஆகிய முக்கிய வீதிகளில் பயணித்து பேரணிப் பிரச்சாரத்தை முடித்துவைத்தனர்.