Skip to main content

“விவசாயச் சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும்வரை போராடுவோம்!” மு.தமிமுன்அன்சாரி பேச்சு!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Rally in Thanjavur

 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நேற்று (21.01.2021) தஞ்சாவூரில் பச்சைக் கொடி பேரணி நடைபெற்றது.

 

11.30 மணி அளவில் பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, “கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்கள் மூழ்கி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்த இழப்பு மற்றும் சோகத்தையும் கடந்து பல்லாயிரக்கணக்கானோர் இங்கு திரண்டுள்ளனர். இது தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டுகிறது.

 

மத்திய அரசு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் என சொல்கிறது. இது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமாகும். சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும்,” என்றார்.

 

தஞ்சையில் இதுவரை இல்லாத அளவில், ரயில்வே ஸ்டேஷன், பழைய பேருந்து நிலையம் வழியாக பேரணி செல்ல அனுமதிக்கப்பட்டதால், வழியெங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆதரவளிக்கும் வகையில் கைகளை அசைத்து பேரணியினரை உற்சாகப்படுத்தினர்.

 

ரயிலடி அருகே திருச்சி மாவட்ட மஜக பொறுப்பாளர் மெய்தீன் தலைமையில் விவசாய அணியினர், பேரணியில் வந்தவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர். ஆற்றங்கறை பள்ளி அருகில் தஞ்சை மாநகர் மாவட்ட மஜக செயலாளர் அகமது கபீர் தலைமையில் மஜக விவசாய அணியினர் மோர் விநியோகித்தனர். நிறைவாக ராஜராஜ சோழன் சிலை அருகில் பேரணி மதியம் 1.30 அளவில் வந்து சேர்ந்தது. அப்போது தாமதமாக வந்த நாகை மாவட்ட  விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவிரி தனபாலன் தலைமையில் வந்து சேர்ந்தனர்.

 

காவிரி உரிமை மீட்புக் குழு தலைவர் பெ.மணியரசன், மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, காவிரி தனபாலன், மருத்துவர் பாரதி செல்வன், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, தமிழ் விடுதலை புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்கள் அடுத்தடுத்து உரையாற்றினர்.

 

நிறைவாக மதியம் 2 .15 மணி அளவில் பேரணி முற்றுபெற்றது. அப்போது திலகர் திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் திரும்பி புறப்படவிருந்தவர்களுக்கு, மஜக சார்பில் மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. 3 மணி நேரம் டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் முழக்கங்களோடு அதிர்ந்த பேரணி அமைதியாக நிறைவுற்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.