அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு இன்றோடு நிறைவு பெறுவதால், நேற்று (19/04/2023) இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்தில் அதிமுகவினர் சார்பில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அவைத் தலைவருமான செம்மலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினர் ஏன் பிரிந்து சென்றார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி மீது யாருக்கும் அதிருப்தி கிடையாது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு பிறகு எந்த பிரச்சனையும் இருக்காது. ஓபிஎஸ் அணியினர் இனிமேல் இரட்டை இலை மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தகுதி இல்லை. அவ்வாறு பயன்படுத்தக் கூடாது. இதனையும் மீறி பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றமாகும். மேலும் அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற காரியத்தை அவர்கள் செய்யமாட்டார்கள். இனியும் முட்டுக்கட்டையும் போட முடியாது. சட்ட போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஒன்றரை கோடி தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி விட்டார்" என்று தெரிவித்தார்.