ADMK with pmk Renegotiate

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் கடந்த 1 ஆம் தேதி (01.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மாநில நலன் மற்றும் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், இதுகுறித்து முடிவு செய்ய பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 5 ஆம் தேதி (05.02.2024) திடீரென சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகத்தகவல்கள் வெளியாகி இருந்தன. அப்போது அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகத்தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரத்தில் இன்று (24.02.2024) மாலை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.