நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல கட்டங்களாக ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை மறுநாள் (09.08.2024) தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (16.8.2024) காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
எனவே அதிமுக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.