Skip to main content

‘அ.தி.மு.கவில் இணைந்தது ஏன்?’ - நடிகை கெளதமி விளக்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
 Actress Gauthami explains Why did join ADMK?

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் மோசடி செய்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகை கௌதமி பாஜகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், ‘25 ஆண்டுகாலமாக கட்சியில் இருந்து வருகிறேன்; ஆனால் எனக்கு கட்சி துணை நிற்கவில்லை. அழகப்பனுக்கு பா.ஜ.கவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் உதவி செய்கின்றனர். அதனால் மிகுந்த மனவேதனையுடன் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகை கெளதமி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கீர்ன்வேஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து நடிகை கெளதமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமியின் பணிகள் என்னைக் கவர்ந்ததால் நான் அ.தி.மு.கவில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பா.ஜ.கவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை உரிய நேரத்தில் நான் விரிவாக கூறுகிறேன்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்