Skip to main content

தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவர முதல்வரின் டெல்லிப் பயணம் அமையட்டும்... கருணாஸ்

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

kk

 

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவர முதல்வரின் டெல்லிப் பயணம் அமையட்டும் என்று முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் சேது. கருணாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலான புதிய ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும், அதை உடனடியாக செயல்படுத்தியும் கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான வரவேற்பையும் பெற்றுவருவது பாராட்டுக்குரியது. முக்குலத்தோர் புலிப்படை சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு 17.06.2021 (இன்று) தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதல்முறையாக தில்லி சென்று பிரதமரை சந்திக்கிறார்.

 

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் தமிழர் உரிமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. பாஜக மத்திய அரசு தமிழ்நாட்டை கடுமையாக வஞ்சித்துவிட்டது. புதிய முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்படும் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே இருந்த அஇஅதிமுக அரசை போல் மத்திய அரசுக்கு எந்த சூழலிலும் வளைந்து கொடுக்காது தமிழ்நாட்டிற்குரிய உரிமைகளை கேட்டு பெற வேண்டும். 

 

kk

 

கடந்த ஆட்சி, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை - கஜானாவை காலிசெய்துவிட்டுத்தான் சென்றது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து புதிய முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சிக்கான பாதையில் தமிழகத்தை அழைத்துச்செல்வது பாராட்டுக்குரியது.

 

கரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால் ஆக்சிஜன், கரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதங்கள் எழுதினார். செங்கல்பட்டில் கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதினார்.

 

ஆகவே, ‘மத்திய அரசு தொடர்புடைய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். 7 தமிழர் விடுதலையை காலம் தாழ்த்தாது உடனடியாக செயல்படுத்த வேண்டும். தற்போது தமிழ்நாட்டின் செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகையான 12,000 கோடி ரூபாயை உடனடியாக தரவேண்டும். தமிழகத்திற்கு கூடுதல் கரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும்.

 

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ பயன்பாட்டுக் கருவிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கான கரோனா தடுப்பு மருந்துகளை குறைக்காமல் வழங்கிட வேண்டும். தடுப்பு மருந்து வழங்குவதில் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

 

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து பெட்ரோல் ரூபாய் 50க்கும், டீசல் விலை 40க்கும் விற்பனை செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்.’

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் பேச வேண்டும். தமிழ்நாட்டிற்கான உரிமையை விட்டுக்கொடுக்காது மீட்டுவர வேண்டும் என தமிழ்நாடு முதல்வரை முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ - சுனிதா கெஜ்ரிவாலின் புதிய பிரச்சாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Sunita Kejriwal launched a new campaign 'Blessing Kejriwal'

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாட்ஸ் அப் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். இதற்காக கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு கூறுவதற்காக வாட்ஸ் ஆப் எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “நாங்கள் இன்றில் இருந்து ‘கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ என்று ஒரு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த வாட்ஸ் ஆப் எண்ணின் மூலம் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்த்து மற்றும் ஆசிர்வாதங்களை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என்று பேசியுள்ளார்.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.