5000 volunteers to seek justice from Annamalai; Uproar in BJP

Advertisment

பிரபா கார்த்திகேயன் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் ஒன்றிய பாஜகவின் இளைஞர் அணித் தலைவராக உள்ளார். சத்திரக்குடி பகுதியைச்சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் பிரபா கார்த்திகேயன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பாஜகவின் நிர்வாக அளவில் வழங்கப்படும் பதவிக்காக பிரபா கார்த்திகேயன் மகேந்திரனிடம் பேரம் பேசுகிறார். அதில் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன் பெயரும் பேசப்பட்டது.

இந்த உரையாடல் இணையத்தில் அதிகமாக பரவியது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வெளியான மற்றொரு அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்..” என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவராக இருந்த கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேன் கூட்டை கலைப்பது போல் கலைத்துள்ளார்கள். அண்ணாமலை கர்நாடக தேர்தல் காரணமாக அங்கு இருப்பதால், அவரை சந்தித்த பின் கமலாலயத்திற்கு சென்று நியாயம் கேட்க தேதி கேட்டுள்ளோம். ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிட்டத்தட்ட 50 வண்டிகள் எடுக்க இருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக்கொண்டு சென்று,என்ன நடந்தது, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் அங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் தலைவரிடம் கேட்டுக்கொண்டு நல்ல முடிவு எடுப்போம்” எனக் கூறியுள்ளார்.