Skip to main content

அனுமதிக்காக காத்திருக்கும் இந்திய கரோனா தடுப்பூசி - முதற்கட்ட பரிசோதனை விவரங்கள் வெளியீடு!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

CORONA VACCINE

 

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டுவருகின்றன. இதில் கோவாக்சின் முழுமையான இந்திய தயாரிப்பாகும். கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனெகா எனும் இங்கிலாந்து தடுப்பூசியின் இந்திய பதிப்பாகும். இந்த இரு தடுப்பூசிகள் மட்டுமின்றி ஸ்புட்னிக் V, மாடர்னா ஆகிய வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை.

 

இந்நிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனம் டி.என்.ஏ கரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. தற்போது தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்காக காத்திருக்கும் அத்தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டால், உலகின் முதல் டி.என்.ஏ கரோனா தடுப்பூசியாகவும், இரண்டாவது இந்திய கரோனா தடுப்பூசியாகவும் ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசி இருக்கும்.

 

இந்தநிலையில் 48 பேர் மீது நடத்தப்பட்ட, ஸைடஸ் காடிலா நிறுவன தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ஸைடஸ் காடிலா நிறுவன தடுப்பூசி, ஆன்டிபாடிகளையும்,  செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்குவது தெரியவந்துள்ளது.

 

மேலும், ஸைடஸ் காடிலா நிறுவன தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் தெரியவந்துள்ளது. 48 பேர் மீது நடத்தப்பட்ட முதற்கட்ட தடுப்பூசி சோதனையில், யாருக்கும் தீவிர பக்க விளைவுகள் ஏற்படவில்லை என தற்போது வெளியாகியுள்ள ஆய்வு விவரங்கள் கூறுகின்றன. 12 பேருக்கு மட்டும் லேசான காய்ச்சல், அரிப்பு, மூட்டு வலி, மிதமான வயிற்றுப்போக்கு போன்ற சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஸைடஸ் காடிலா நிறுவன தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டது. மேலும், தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதுகாப்பானது என ஸைடஸ் காடிலா நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்