/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala-kamala-serry-fire_0.jpg)
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எறிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 36 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமசேரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் குண்டு வெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் கூறுகையில், "வழிபாட்டு அரங்கில் நடந்தது குண்டுவெடிப்பு தான். இன்று காலை 9:40 மணியளவில் ஜம்ரா சர்வதேச மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு நடந்து கொண்டிருந்தது. தற்போது மூத்த காவல் அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்தில் உள்ளனர். கூடுதல் டி.ஜி.பி.யும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். நானும் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்ல உள்ளேன். முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala-dgp.jpg)
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவத்திற்கு டிபன் பாக்ஸ் வகை குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கப்படும். குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்தத்தகவலும் கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பவம் குறித்து பொய்யான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத்தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)