Skip to main content

பிரதமராகப் பதவியேற்கும் மோடி; பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
World leaders participating in the inauguration ceremony in Modi to take oath

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

அந்த வகையில், குடியரசுத் தலைவர் திரவெளபதி முர்முவை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோரியதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 9 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் மோடிக்கு 75க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே போல், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  அதில், நேபால் பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர்களும் பங்கேற்க இருக்கின்றனர். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தெலுங்கில் பதவியேற்ற தமிழக எம்.பி!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tamil Nadu MP sworn in Telugu

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்கள் பதவியேற்றனர். அந்த வகையில் சசிகாந்த் செந்தில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா எஸ். ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், மாணிக்கம் தாகூர், கே.சுப்பராயன், தொல்.திருமாவளவன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த், சி.என். அண்ணாதுரை, சு.வெங்கடேசன், செல்வ செல்வகணபதி, விஷ்ணு பிரசாத், கே.நவாஸ்கனி, க.செல்வம், விஜய் வசந்த், ரவிக்குமார், மலையரசன், ஈஸ்வரசாமி, சுதா, ராணி ஸ்ரீ குமார், மாதேஸ்வரன், சச்சிதானந்தம், செல்வராஜ், ராபர்ட் புரூஸ், வைத்திலிங்கம், ஆ.மணி, தரணிவேந்தன், கணபதி ராஜ்குமார், பிரகாஷ், துரை வைகோ, முரசொலி, அருண் நேரு, தங்க தமிழ்ச்செல்வன் என 39 பேரும் தமிழில் பதவியேற்று கொண்டனர். 

இவர்களில் பலரும் கையில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டும் தி.மு.க எம்.பி.க்கள் பதவியேற்றனர். அதோடு சிலர், ‘வருங்காலம் எங்கள் உதயநிதி’ எனக் கூறியும் பதவியேற்றனர். 

இதில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி கே.கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. தெலுங்கில் பதவியேற்றது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், அவர் பதவியேற்ற பின் இறுதியாக, ‘நன்றி, வணக்கம்’ எனக் குறிப்பிட்டு ‘ஜெய் தமிழ்நாடு’ எனக் கோஷம் எழுப்பினார்.

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.