Skip to main content

"இதுபோன்ற சம்பவம் இனி எந்த வீரருக்கும் நடக்கக்கூடாது" - கண்டனம் தெரிவித்த மகளிர் ஹாக்கி அணி கேப்டன்! 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

rani rampal

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், காலிறுதிக்கு கூட செல்லாது என கூறப்பட்ட இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது. மகளிர் அணியின் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. இந்தநிலையில், இந்திய  மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி இளைஞர்கள் இருவர், வந்தனா கட்டாரியா குடும்பத்தினர் மீது சாதிய வன்மத்தைக் கக்கியுள்ளனர்.

 

அரையிறுதியில் இந்திய மகளிர் அணி தோற்றதும் பிற சாதி இளைஞர்கள் சிலர், வந்தனா கட்டாரியா வீட்டின் முன் பட்டாசு வெடித்து ஆடியதொடு மட்டுமல்லாமல், வந்தனாவின் குடும்பத்தையும் சாதி ரீதியாக இழிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள், அதிக பட்டியலினத்தவர்கள் அணியில் இருந்ததால்தான் அணி தோற்றது எனவும், ஹாக்கியில் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்களை வெளியிலேயே வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

 

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வந்தனாவின் குடும்பத்தினர் சாதி ரீதியாக இழிவு படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் "வந்தனாவின் குடும்பத்தினருக்கு நடந்தது வெட்கக்கேடான செயல். சாதிவெறியை விடுத்து முன்னேற வேண்டும் என மக்களிடம் கூற விரும்புகிறேன். நமது மதங்கள் வெவ்வேறானவை. நாங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் நாங்கள் விளையாடும்போது இந்திய கொடிக்காகத்தான் ஆடுகிறோம். இதுபோன்ற சம்பவம் இனி எந்த வீரருக்கும், சாதாரண மனிதனுக்கும் நடக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன...” - தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Tamil Nadu Governor RN Ravi says Caste discrimination is increasing in Tamil Nadu

 

தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது; மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், அவரே அந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர், அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

 

அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “சமூகநீதி என்ற பெயரில் இந்த சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்கள்” என்று தமிழக அரசைக் குற்றம்சாட்டிப் பேசினார். அது அப்போது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். 

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு பூணூல் அணியும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.என். ரவி, “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

 

தமிழகத்தில் பட்டியலின பெண் ஒருவர் ஊராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் பட்டியலினத்தவர் என்பதால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரால் பதவியேற்க முடியவில்லை. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதே இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்” என்று கூறினார். 

 

 

Next Story

கல்லூரியில் சாதி பாகுபாடு; மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Three professors transferred for Caste discrimination in college

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய மூன்று பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார்கள் எழுந்தன.  சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வியாசர்பாடி, கும்பகோணம் ஆகிய பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில் உண்மைத்தன்மை இருப்பதாக மாணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்தனர்.

 

அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில், வியாசர்பாடி அரசு கல்லூரியில் பணியாற்றிய ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றிய கிருஷ்ணன், கும்பகோணத்தில் பணியாற்றிய சரவண பெருமாள் ஆகிய மூன்று பேராசிரியர்களையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோன்று அரசு மற்றும் கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டும் பேராசிரியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அவர்களை வேறு ஊர்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்துப் பேசிய கல்லூரி கல்வி இயக்குநர் கீதா, “ஆசிரியர் என்பவர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசிரியர்களே தவறு செய்யும் போது அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் நாளை எப்படி சிறந்த மாணவர்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு பாடம் எடுப்பது; அவர்களை தேர்வுக்கு தயார் செய்வது; அடுத்த நாள் பாடத்துக்கு தங்களை தயார் செய்வது என அந்த வேலைகளைப் பார்ப்பதற்கே கல்லூரி பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. அப்படி இருக்கையில் இதுபோன்று சமூகம் சார்ந்த விஷயங்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கும், அவர்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு எப்படி நேரம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நமது பிள்ளைகள் தான் என்ற எண்ணம் பேராசிரியர்களுக்கு வர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் எங்கும் நடக்கவில்லை. இனிமேல், இதுபோன்று நடந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.