Skip to main content

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு; போலீஸார் அதிரடி இடமாற்றம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Woman set on fire in front of police station in puducherry

 

புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவருடைய மனைவி கலைச்செல்வி (35). இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். இந்த கடன் தொகையை சந்திரன் - கலைச்செல்வி தம்பதியினரிடம் கொடுக்காமல் ஏழுமலை காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன் தினம் சந்திரன் தனது மனைவியோடு ஏழுமலை வீட்டுக்குs சென்றுள்ளார். அங்கு, பணத்தை திருப்பித் தரும்படி சந்திரன் ஏழுமலையிடம் கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஏழுமலைக்கும், சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பணத்தை தரக்கூறி தன்னை மிரட்டுவதாக ஏழுமலை காலாப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

 

அந்த புகாரை விசாரித்த காவல்துறையினர், சந்திரனையும் கலைச்செல்வியையும் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணம் வாங்கிய ஏழுமலையை காவல்துறையினர் நாற்காலியில் அமர வைத்தும், சந்திரன் மற்றும் அவரது மனைவியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, காவல் நிலைய வாசலில் நின்று கொண்டு தனது வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கலைச்செல்வியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

 

தகவல் அறிந்து காவல்நிலையத்துக்கு வந்த சந்திரனின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு  மற்றும் போலீஸார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, தம்பதியினரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, காலாப்பட்டு எஸ்.ஐ. இளங்கோ, துணை உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விநாயகர் சதுர்த்தியில் ஏற்பட்ட முன்பகை; 6 மாதத்திற்குப் பின் நிகழ்ந்த படுகொலை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Enemy on Ganesha Chaturthi; Tragedy happened after 6 months

புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் சிவானந்தம் என்ற இளைஞர் நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி மாநிலம் ஈசன்காடு பகுதியில் வசித்து வந்த சிவானந்தம் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், மகேந்திரன், ரஞ்சித், கார்த்திக் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி சிவானந்தத்தை படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

Enemy on Ganesha Chaturthi; Tragedy happened after 6 months

கொலை நடந்த பகுதிக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில், கொலையில் சம்பந்தப்பட்ட ரஞ்சித், மகேந்திரன், ஆகாஷ், கார்த்திக் ஆகிய நான்கு இளைஞர்களும் சரணடைந்தனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தியின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

Next Story

'இதுவே ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திடும்' - நாராயண சாமி கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.

'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள கருத்தாவது, 'ஒரு அரசியல் கட்சிக்கு நிதி கொடுப்பவர்கள் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அந்த அரசியல் கட்சியினுடைய அனுதாபிகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நிர்ப்பந்தம் காரணமாக அல்லது சலுகைகள் பெறுவதற்காக தேர்தல் நிதி கொடுக்கலாம். அதனால் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.