Skip to main content

காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு; போலீஸார் அதிரடி இடமாற்றம்

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Woman set on fire in front of police station in puducherry

 

புதுச்சேரி, பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (38). இவருடைய மனைவி கலைச்செல்வி (35). இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் கொடுத்துள்ளனர். இந்த கடன் தொகையை சந்திரன் - கலைச்செல்வி தம்பதியினரிடம் கொடுக்காமல் ஏழுமலை காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று முன் தினம் சந்திரன் தனது மனைவியோடு ஏழுமலை வீட்டுக்குs சென்றுள்ளார். அங்கு, பணத்தை திருப்பித் தரும்படி சந்திரன் ஏழுமலையிடம் கேட்டுள்ளார். சிறிது நேரத்தில் ஏழுமலைக்கும், சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பணத்தை தரக்கூறி தன்னை மிரட்டுவதாக ஏழுமலை காலாப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

 

அந்த புகாரை விசாரித்த காவல்துறையினர், சந்திரனையும் கலைச்செல்வியையும் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்குச் சென்றபோது அங்கு பணம் வாங்கிய ஏழுமலையை காவல்துறையினர் நாற்காலியில் அமர வைத்தும், சந்திரன் மற்றும் அவரது மனைவியை நிற்க வைத்தும் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைச்செல்வி, காவல் நிலைய வாசலில் நின்று கொண்டு தனது வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கலைச்செல்வியை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

 

தகவல் அறிந்து காவல்நிலையத்துக்கு வந்த சந்திரனின் உறவினர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு  மற்றும் போலீஸார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, தம்பதியினரின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, காலாப்பட்டு எஸ்.ஐ. இளங்கோ, துணை உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்