Woman incident in luxury car collision by shiv sena party leader son

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த நிலையில், புனே கார் விபத்து சம்பவம் போல் மீண்டும் ஒரு பகீர் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் நேற்று (07-07-24) பிஎம்டபிள்யூ கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இந்த கார், அங்குச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தியதில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா தான் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, மிஹிர் ஷா தலைமறைவாகி இருக்கிறார். இந்த நிலையில், மிஹிர் ஷாவின் தந்தையும், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் துணைத் தலைவருமான ராஜேஷ் ஷாவையும், ராஜேஷ் ஷாவின் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெயர் காவேரி நாக்வா என்பதும், இவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.